Published : 08 Mar 2021 03:58 AM
Last Updated : 08 Mar 2021 03:58 AM

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி - தூத்துக்குடியில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு :

தூத்துக்குடி ரோச் பூங்காவில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி ரோச் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் ரங்கோலி கோலம் வரைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஸ்கேட்டிங் மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி பேரணியை தொடங்கி வைத்தார். கையெழுத்து இயக்கத்தையும் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்ட ரங்கோலி கோலத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக் களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மின்சார வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் ரசீதுகளில் ‘100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் நாள் ஏப்ரல் 6’ என விழிப்புணர்வு சீல் வைத்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பாட் இயந்திரம் கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தற்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும், வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி எங்கு உள்ளது என்பது குறித்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், கூட்டுறவு காய்கறி விற்பனை அங்காடி நிர்வாக இயக்குநர் அந்தோணிபட்டுராஜ், வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x