Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 74 கிலோ வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.21.58 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கந்தம்பட்டியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள 74.73 கிலோ வெள்ளிக் கொலுசு 13 கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை தாண்டவராயன் நகரைச் சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பவர் பனங்காட்டு பகுதிக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
சேலம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் நடந்த சோதனையின்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை சோதனை செய்ததில், பெங்களூருவைச் சேர்ந்த பாலசுரேஷ் என்பவர் கார் வாங்க ஆவணமின்றி ரூ.7.57 லட்சம் கொண்டு வந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் கொங்கணாபுரம் மூலப்பாதையில் நடந்த சோதனையில், மேச்சேரியைச் சேர்ந்த சுகுமார் என்பவர் காரில் உரிய ஆவணமின்றி ரூ.65 ஆயிரம் கொண்டு வந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.8.22 லட்சத்தை அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி, அரூரில்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தொகரப்பள்ளி கூட்டுரோடு பகுதியில் நேற்று காலை அவ்வழியே திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவர், உரிய ஆவணங்களின்றி ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பர்கூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் வட்டாட்சியர் குமரவேலிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். விசாரணையில் பாண்டுரங்கன், நிலக்கடலை வாங்குவதற்காக பணம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இதேபோல், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளியில் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தியாகரசனப்பள்ளியைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் காரை சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி பிரிவு சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 800 இருந்தது தெரிந்தது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ராமியம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (23) என்பதும், அவர், சீட்டு பணம் எடுத்துக் கொண்டு அரூருக்கு நகை வாங்கச் சென்றதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஓசூரில் ரூ.2.50 லட்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கொத்தக்கொண்டப்பள்ளி சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நஞ்சுண்டன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் (38) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் குணசேகரிடம், பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்பித்து கொலுசு மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT