Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM
வங்கி ஏடிஎம் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் பேசியதாவது:
திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும்போது அதன் விவரத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். போலியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விருந்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். மண்டபங்களை முன்பதிவு செய்யும்போது, திருமண பத்திரிகை, ரேஷன் கார்டு நகலை பெற்று முன்பதிவு செய்ய வேண்டும்.
அச்சகங்களுக்கு கட்டுப்பாடு
அச்சடித்த 3 தினங்களுக்குள் இணைப்பு– 2 படிவத்தில் உரிய விவரங்களையும் அச்சிடப்பட்ட பிரதியின் எண்ணிக்கை மற்றும் செலவுத் தொகையையும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
அனுமதி வேண்டும்
நகை அடகுதொழில் செய்வோர் பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக, அடகு வைத்த நகைகளை திரும்பப்பெற டோக்கன், அடையாள வில்லைகள் உள்ளிட்டவைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது.கேபிள் டிவி இயக்குநர்கள், கேபிள் உரிமையாளர்கள், அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்புதல் வேண்டும்.
பணப்பரிமாற்றம்
வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குக்கு ஆர்டிஜிஎஸ் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றால் அதுதொடர்பான தகவல்களை தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கு, வேட்பாளர், அவரது மனைவி, அவரை சார்ந்தோர் ஆகியோரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கு மேல் வரவு மற்றும் பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரங்களையும், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனம் தொடர்பான விவரம், நாள், நேரம் ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட்டு உரிய ஆவணங்களோடு பணம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், பதிப்பாளர்கள், நகை அடகு தொழில்புரிவோர், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT