Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

தலைவாசலில் 22-ம் தேதி ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதல்வர் திறந்து வைக்கிறார் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தகவல்

தலைவாசலில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் ராமன், மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர்.

சேலம்

சேலம் மாவட்டம் தலைவாசலில் வரும் 22-ம் தேதி ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலைவாசலில் இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிலையம், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களை வரும் 22-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைத்து, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்குகிறார்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே 3 கால்நடை மருத்துக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் திறந்த பெருமை தமிழக முதல்வரை சாரும். 3 கல்லூரிகளிலும் நடப்பாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றன. தலைவாசல் கல்லூரி சுமார் ரூ.118 கோடி மதிப்பில் 73.80 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு (தஞ்சாவூர்) மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 5-வதாக தலைவாசலிலும், 6-வதாக தேனியிலும், 7-வதாக உடுமலைப்பேட்டையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

தலைவாசல் கால்நடை பூங்காவுக்காக சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர் கொண்டுவர ரூ.262.16 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியும், கோழி இனங்கள் ஆராய்ச்சிக்கு பல்லடத்தில் ரூ.15 கோடியில் ஆராய்ச்சி மையத்தையும் முதல்வர் உருவாக்கித் தந்துள்ளார். தீவன நோய் ஆராய்ச்சி மையமும் இங்கு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கால்நடை தீவன உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சேலம் ஆட்சியர் ராமன், எஸ்பி தீபா காணிகர், எம்எல்ஏ-க்கள் மருதமுத்து, வெங்கடாசலம், சின்னதம்பி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x