Published : 19 Feb 2021 03:25 AM
Last Updated : 19 Feb 2021 03:25 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் புதிய காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உறுதி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மயில்வாகனன், கோவை மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணைய ராகவும், சேலம் மண்டல கலால் பிரிவு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சிவகுமார் நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லாமல் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாமல் ஒழிக்கப்படும். இரவு நேர ரோந்துப் பணி அதிகரிக்கப்படும்’’ என்றார்.

காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் வட்டம் வடுகம் கிராமத்தில் பிறந்தவர். கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து கால்நடை மருத்துவராக பணியை தொடங்கியவர். கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படை பயிற்சிக்குப் பிறகு 2002-ல் நாமக்கல் மாவட்டம் பி.வேலூரில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். விருதுநகர், சங்ககிரி, ஓமலூரில் துணை காவல் கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர், பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து, தி.நகர், மத்திய குற்றப்பிரிவு, நவீன கட்டுப்பாட்டு அறை, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016-18-ம் ஆண்டு வரை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், 2018 முதல் 2019-ம் ஆண்டு வரை சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சேலம் மண்டல கலால் பிரிவு காவல் கண்காணிப் பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள இவர், தஞ்சை கோயில், ராஜராஜ சோழன் குறித்து எழுதிய பாடலுக்கு பிரபல பாடகர்கள் சீர்காழி சிவசிதம் பரம், அனுராதா ராம் ஆகியோர் பாடியுள்ளனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து கவிதைப் புத்தகம் எழுதியுள்ளார். 2018-ம் ஆண்டு ‘காக்கிப்பூவின் கவிதைகள்’ என்ற நூலையும், கடந்த ஆண்டு ‘தமிழின் கணக்கும் தமிழனின் கணக்கும்’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x