Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
விசைத்தறி தொழிலை மேம்படுத்த குறைந்த விலையில் அரசு நூல் வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட நிதியளிப்பு பேரவைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் இரண்டு முறை சமையல் எரிவாயு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.
தமிழக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளன. கடன் தவணைகளை கட்ட ஓராண்டு காலத்திற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு, பட்ஜெட்டில் போடப்பட்ட புதிய வரி, கரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி உள்ளிட்டவற்றால் ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி, கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறி தொழிலை மேம்படுத்த அரசே நூலை வாங்கி குறைந்த விலையில் விநியோகம் செய்ய வேண்டும்.
மருத்துவர்கள, சத்துணவு, டாஸ்மாக் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.
தமிழகத்தில் மூன்றாவது அணி, 4-வது அணி என அமைவது அவரவர் விருப்பம். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக, அதிமுக அணி தான் உள்ளது.
திமுக அணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிமுக கூட்டணி கலகலத்து போன கூட்டணி. அதிமுக நான்கு ஆண்டு காலத்தில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்போது நலத் திட்டங்களை அறிவிப்பது தேர்தலை குறிவைத்து தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், என்றார்.
நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், ந.வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT