Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
அதிமுக-வில் எள் முனையளவும் பிளவு இல்லை. எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறோம். தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை சேலம் ஓமலூர் வந்த முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:
‘அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்’ என சசிகலா கூறியுள்ளரே?
இது ஜனநாயக நாடு. இங்கு அடக்குமுறை என்பதெல்லாம் கிடையாது.
சசிகலா கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என கூறியுள்ளாரே?
இதற்கு ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார், கே.பி.முனுசாமி ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
அமைச்சர் வேலுமணி, ‘அண்ணன்- தம்பி பிரச்சினை’ என்று கூறியிருக்கிறாரே?
அது தவறான செய்தி. கட்சிக் கூட்டத்தில் பேசியதை தனியாக எடுத்து, திரித்து வெளியிட்டுள்ளனர்.
சசிகலா வருகை தாக்கத்தை எற்படுத்துமா?
இதற்கும் ஏற்கெனவே அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துவிட்டார். அதிமுக-வில் யார் இருக்கிறார் என அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார்.
சசிகலாவின் உறவினர்களின் சொத்துகள் அரசுடைமையாக்கப் பட்டு வருகிறதே?
நீதிமன்ற தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
அது அறியாமை. அறியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர். ஏற்கெனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, முதல்வர்கள், அமைச்சர்கள் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிட்டது. அதில், திமுக-வின் 13 முன்னாள் அமைச்சர் மீது வழக்கு விசாரணையில் உள்ளது.
சசிகலா குறித்து நீங்கள் அதிகம் பேசுவதில்லை, தினகரன் பற்றித்தான் அதிகம் பேசுகிறீர்கள் என மக்களிடம் கருத்து உள்ளதே?
கட்சியில் இருப்பவரைப் பற்றிதான் பேச முடியும். தினகரன் தான் எங்கள் கட்சியில் இருந்து 18 எம்எல்ஏ-க்களை பிரித்துச் சென்று ஆட்சியை கவிழ்க்கப் பார்த்தார். கட்சியை உடைக்க முடியவில்லை. அதனால், அவரைப் பற்றித் தானே பேச முடியும்.
பாஜக, தேமுதிக பிரேமலதா என உங்கள் கூட்டணி கட்சியினர் சசிகலாவை ஆதரித்துப் பேசுகின்றனரே?
ஆதரித்தால் அது அவர்கள் விருப்பம். ஒவ்வொரு கட்சியிலும் ஒரு கருத்து சொல்வார்கள். அதில் நாங்கள் எப்படி தலையிட்டு கருத்து சொல்ல முடியும். பாமக-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறாது. இட ஒதுக்கீடு வெளிப்படையாக பேசக்கூடியது அல்ல. திமுக-வில் கூட கூட்டணி தொடர்பாக பல கட்டமாக பேச்சுவார்த்தை நடக்கிறது.
நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் மக்களிடம் எழுச்சியும் ஆதரவும் உள்ளது. மக்கள் வெள்ளம் கடல்போல காட்சியளிக்கிறது. அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும், அதிமுக அரசு மீண்டும் தொடரும்.
வருவாய்த்துறை ஊழியர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நிதி நிலைமையை பொறுத்து தான் அரசு ஊழியர்களுக்கு தேவையான நன்மையை செய்ய முடியும். கரோனா தொற்று ஏற்பட்டபோது, பல மாநிலங்களில் அரசு ஊழியர்களிடம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவில்லை. மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்தபோது, அதையும் தொடர்ந்து வழங்கினோம். அரசு ஊழியர்களுக்கு அதிகமான சலுகையை அதிமுக அரசு அளித்துள்ளது.
‘முதல்வர் வெளிப்படையாக வருகிறார்..பேசுகிறார். ஆனால், துணை முதல்வர் அதுபோல வருவதில்லை’ என துரைமுருகன் கூறியிருக்கிறாரே?
துரைமுருகன் முதலில் தனது கட்சியைப் பார்க்கட்டும். அழகிரியைப் பற்றி பேசச்சொல்லுங்கள். நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். திட்டமிட்டு விஷம பிரச்சாரம் செய்கின்றனர். எள் முனையளவும் எங்கள் கட்சியில் பிளவு இல்லை.
ஸ்டாலினிடம் பிரதமர் அதிகமாக பேசுவது தொடர்பாக எனக்குத் தெரியாது. ஆனால், பேசி என்ன பயன். அவர்கள் மத்திய அரசில் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதே.. யாரிடமிருந்தாவது அச்சுறுத்தல் உள்ளதா?
அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT