Published : 08 Feb 2021 03:11 AM
Last Updated : 08 Feb 2021 03:11 AM

நாமக்கல்லில் நடந்த விழாவில் 1,874 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி, தங்கம் வழங்கல்

நாமக்கல்லில் நடந்த விழாவில், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் சமூகநலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ்.

நாமக்கல்

நாமக்கல்லில் திருமணத்திற்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி. பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:

தமிழக முதல்வர் ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு வங்கிகளுக்கு நிதி விடுவிக்கப்படும், என்றார்.

சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் திருமண நிதி உதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை ரூ.28.64 கோடி திருமண நிதி உதவித் தொகையுடன் மொத்தம் 148 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

விழாவில், 1,874 பயனாளிகளுக்கு ரூ.8.53 கோடி மதிப்பில் நிதியுதவி மற்றும் ரூ.7.08 கோடி மதிப்பில் 14.992 கிலோ கிராம் தங்கம் என மொத்தம் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 192 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட சமூகநல அலுவலர் பி.கே.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x