Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
காலிமனைகளில் குப்பைக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும், மனை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, நடைபயிற்சியின்போது நடைபாதைகளில் உள்ள குப்பைகளை சேகரித்து அகற்றும் ‘சேலம் பிளாகிங்’ மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
நேற்று சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் காலனி, சாஸ்திரி நகர், சுந்தரம் காலனி; அஸ்தம்பட்டி மண்டலத்தில் அத்வைத ஆசிரமம் ரோடு, சின்னத்திருப்பதி ரோடு, அடைக்கல நகர், எழில் நகர், அம்மாப்பேட்டை மண்டலத்தில் பழைய பிள்ளையார் கோயில் தெரு, விவேகானந்தர் தெரு, கொய்யா தோப்பு, மன்னார்பாளையம் பிரிவு சாலை, தாதம்பட்டி ரோடு, பாரதியார் தெரு, வஉசி நகர், ஆறுமுக நகர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஆர்ஆர் பேர்லாண்ட்ஸ், மேட்டு வள்ளலார் தெரு, அன்னதானப்பட்டி காவலர் குடியிருப்பு, சங்ககிரி மெயின் ரோடு, ராஜிவ்காந்தி தெரு, வடக்கு தெரு ஆகிய இடங்களில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
இதில், 575 தன்னார்வலர்கள் பங்கேற்று 715 கிலோ கழிவுகளை சேகரித்தனர்.
அஸ்தம்பட்டி மண்டலம், சின்னத்திருப்பதி அபிராமி கார்டன் பகுதியில் நடந்த இப்பணியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசும்போது, “சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரித்து, வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். வீடு, கடை, நிறுவனம், கல்வி நிலையங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் பொதுக்கள் தவிர்க்க வேண்டும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் உருவாக்கி பசுமை நிறைந்த மாநகராட்சியாக சேலத்தை மாற்ற பொதுமக்கள் முன் வர வேண்டும். காலிமனை பிரிவுகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
காலிமனைகளில் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் மனையை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காலிமனைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும், உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்கரவர்த்தி, திலகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT