Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM
சேலம் மாவட்டம் சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலையில், குட்டப்பட்டி நால்ரோடு முதல் ஜே.எஸ்.டபிள்யூ இரும்பாலை வரை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுமென,’ சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) வத்சலா வித்யானந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) வத்சலா வித்யானந்தி தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்துக்கு உட்பட்ட சங்ககிரி-மேச்சேரி மாநில நெடுஞ்சாலையில், குட்டப்பட்டி நால்ரோடு முதல் ஜே.எஸ்.டபிள்யூ இரும்பாலை வரை ரயில்வே கிராஸிங்கிற்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 1106 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.
மேம்பாலப் பணிகளால் குட்டப்பட்டி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாமல் இருந்தது. மேம்பாலப் பணிக்காக, சங்ககிரி – மேச்சேரி சாலையில் குட்டப்பட்டி பிரிவு முதல் ஜே.எஸ்.டபிள்யூ, இரும்பாலை வரை வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, இன்று (6-ம் தேதி) முதல் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
இதன்படி, மேச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இன்று முதல் குட்டப்பட்டி பிரிவு ரோட்டிலிருந்து, ஏர்வாடி, பொட்டனேரி, எம்.காளிப்பட்டி, காவேரி பொறியியல் கல்லூரி வழியாக மேச்சேரி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். அதேபோல, மேச்சேரியிலிருந்து நங்கவள்ளி மார்க்கமாகச் செல்லும் வாகனங்களும் இன்று முதல் காவேரி பொறியியல் கல்லூரி, எம்.காளிப்பட்டி, பொட்டனேரி, ஏர்வாடி வழியாக குட்டப்பட்டி பிரிவுக்கு இதே மாற்றுப்பாதையில் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, சங்ககிரி-மேச்சேரி மாநில நெடுஞ்சாலையில், குட்டப்பட்டி நால்ரோடு முதல் ஜே.எஸ்.டபிள்யூ இரும்பாலை வரை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஏதுவாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT