Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

தி.மலையில் விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை கொட்டகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை கொட்டகை கேட்டு ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 42 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் பார்த்து கேட்டபோது, மனு ஏதும் வரவில்லை என்றார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் கொடுத்தும் பலனில்லை. தி.மலை மாவட்டத்தில் கால்நடை கொட்டகை அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மேலும், நிவர் புயல் நிவாரணமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவில்லை. நீர்வரத்துப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப் படவில்லை. கறவை மாடுகளுக்கு கடன் வழங்குவதிலும் பாரபட்சம் உள்ளது. பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மாற்றம் செய்து தரவில்லை. இதனால், மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான உதவித் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் மனு மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி, பொதுமக்கள் கொடுக்கும் நினைவூட்டல் மனு மீது ஆட்சியர் நேரிடையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் குறைதீர்வு கூட்டம் தொடங்கியுள்ளதால், வட்டார அளவில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் நடை பெறும் விவசாய குறைதீர்வு கூட்டம்மற்றும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட் டத்தை நடத்த வேண்டும்” என்றார்.

இதில், மாவட்டச் செயலாளர் சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூக்களை வைத்துக் கொண்டும், நெஞ்சு மற்றும் முதுகில் மனுவை குத்திக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கால்நடை கொட்டகை கேட்டு முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x