Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 03:12 AM

சேலம், ஈரோடு,தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 10.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல் 6-ம் தேதி வரை வழங்கவும் நடவடிக்கை

காரிமங்கலத்தில் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோ முகாமை தொடங்கிவைத்தார். உடன், ஆட்சியர் கார்த்திகா உள்ளிட்டோர்.

சேலம்

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் 3,49,525 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர நிலையங்களில் 6-ம் தேதி வரை 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சுங்கச் சாவடிகளில் இன்று (நேற்று) தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் சொட்டு மருந்து வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செல்வகுமார், மாநில இணை தாய் சேய் நல அலுவலர் சசிதேவி, ஓமலூர் வட்டாட்சியர் அருள்பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் 1374 மையம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் குழந்தைகளுக்கு, 1374 மையங்களில் நேற்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டுமருந்து முகாமினைத்தொடங்கி வைத்தார். போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணியில் 5361 பணியாளர்கள் மற்றும் 9 சிறப்பு குழுக்கள் ஈடுபட்டன. போலியோ சொட்டு மருந்து போட முடியாத குழந்தைகளுக்காக, இந்த குழுவினர் அடுத்த இரண்டு நாட்களில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று போலியோ சொட்டு மருந்து செலுத்துவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் 1.60 லட்சம்

பள்ளிபாளையம் அருகே ஆலாம் பாளையத்தில் நடந்த முகாமுக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப் பணிக்காக 1,274 முகாம் அமைக்கப்பட்டது. இப்பணியில் 5,523 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 48 சிறப்பு முகாம்கள், 36 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது,என்றார்.

பள்ளிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கு.ரேவதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். முகாமை தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்து பேசும்போது, “தருமபுரி மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 443 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இப்பணியில் 4083 பேர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப் பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) இளங்கோவன், காசநோய் பணிகள் துணை இயக்குநர் ராஜ்குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பார்கவி, வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, மருத்துவ அலுவலர் அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த முகாமை ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தொடங்கிவைத்து பேசும்போது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 951 மையங்கள் அமைக்கப்பட்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 486 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது” என்றார்.இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கோவிந்தன், வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூரில் 56 மையம்

ஓசூர் அப்பாவுபிள்ளை பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமை, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் விவேக், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சுந்தர மூர்த்தி, மணி, மோகன் மற்றும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x