Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச கொடி யேற்று நிகழ்வு நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு தைப்பூச திருவிழாவின் கொடியேற்றம் நேற்று காலை தொடங்கியது.
வள்ளலாருக்கு சத்திய ஞானசபை கட்ட நிலத்தை தானமாக அளித்த பார்வதிபுரம் கிராம மக்கள் வரிசை தட்டுடன் மேளதாளம் முழங்க வந்தனர். பின்னர் அக்கிராம பெரியவர்கள் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவையொட்டி இன்று (ஜன.28) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி 10 மணி, நாளை(ஜன.29) காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசு அதிகாரிகள் ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
வரும் 30-ம் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற இடத்தில் திருஅறைதரிசனம் நடைபெறும். முன்னதாக வடலூர் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்
தைப்பூச ஜோதி தரிசனத்தை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரள்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் வடலூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோன தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT