Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM
சேலம் ரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் ரூ.25 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது என கோட்ட மேலாளர் கவுதம் னிவாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் 72-வது குடியரசுத் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் னிவாஸ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியதாவது:
கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கின்போது, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டசரக்குகள், சேலம் கோட்டத்தில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
ஊரடங்கினால், ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டபோதிலும், சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு ரயில் சேவை மூலம் 2.08 மில்லியன் டன் சரக்குகளை அனுப்பி ரூ.158 கோடி வருவாய் ஈட்டியது. சேலம் கோட்டத்தில், 5 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் 20 கிலோ வாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவப்பட்டுள்ளது. சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.25 லட்சம் சேமித்துள்ளது.
பயணிகள் வசதிக்காக, சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் லிஃப்ட், நகரும் படிக்கட்டு, நடைமேடைகள் உள்ளிட்ட வசதிகள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மேம்பாட்டின் அடிப்படையில், 16 பெரிய ரயில்வே பாலங்கள், 39 கிமீ நீள ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டன. 10 ரயில் நிலையங்களில் தீ தடுப்பு எச்சரிக்கை அலாரங்கள் பொருத்தப்பட்டன. பெண் பயணிகள் பாதுகாப்புக்காக 3 பெரிய ரயில் நிலையங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ரதீஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT