Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர், உடுமலையில் விவசாயிகள் வாகன பேரணி

திருப்பூர் / கோவை/ உடுமலை

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், இருசக்கர வாகனப் பேரணி மற்றும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன.

திருப்பூர் மாநகரில் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு, தாராபுரம் சாலை கோவில்வழி, அவிநாசி சாலை காந்திநகர் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கின.

மாநகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலை முன்பு பேரணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். திருப்பூர்மக்களவைத் தொகுதி உறுப்பினர்கே.சுப்பராயன் தேசியகொடியை ஏற்றி வைத்து பேசினார். அனைவரும் தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பொங்கலூர் ஒன்றியத்தை சேர்ந்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர், கட்சியினர் சார்பில் தடையை மீறி நேற்று டிராக்டர் பேரணி நடைபெற்றது.

அமராவதிபாளையத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்தனர். கோவில்வழி பம்ப் ஹவுஸ் அருகே, விவசாயிகளை அவிநாசிபாளையம் போலீஸார் தடுத்தி நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தை யில், கோவில்வழி வரை சென்று பெருந் தொழுவு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடர்ந்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில்மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் காய்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

உடுமலை குட்டைத்திடலில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வாகன ஊர்வலம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் எஸ்.ஆர்,மதுசூதனன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய சாலைகளின் வழியாக வந்து மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர்.

எஸ்டிபிஐ போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சியினர், ஏர் கலப்பைகளை ஏந்தியவாறு கோவையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டப் பொதுச் செயலர் ஏ.எச்.முகமது இசாத் தலைமை வகித்தார்.

உடுமலை குட்டைத்திடலில் இருந்து சேக் அமீர் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று கண்டன ஊர்வலம் நடத்த முற்பட்டனர். ‘‘பேரணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஒலி பெருக்கி வைக்க அனுமதி இல்லை’’ என போலீஸார் எச்சரித்தனர். இதனால் சிறிது நேரம் போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே காரசார வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகன பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x