Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72-வது குடியரசு தின விழா நடந்தது

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஆட்சியர் ராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், எஸ்பி தீபா காணிகர். அடுத்தபடம்: நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஏற்றுக் கொண்டார். கடைசிபடம்: ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடந்த விழாவில், கரோனா பரவலின்போது முன்களப்பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளருக்கு ஆட்சியர் சி.கதிரவன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

சேலம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72-வது குடியரசு தின விழா நடந்தது.

விழாவில், ஆட்சியர் ராமன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். பின்னர் காவலர்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 121 காவல் ஆளிநர்களுக்கும் முதல்வரின் காவலர் பதக்கங்களையும், பல்வேறு அரசுத் துறை சார்ந்த 139 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிதி மூலம் சிறந்த 5 பள்ளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையும், சிறந்த 3 தொடக்க பள்ளிகளுக்கு சுழற்கேடயங்களையும் வழங்கினார்.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தியாகிகளின் வாரிசு தாரர்களின் வீடுகளுக்கு அந்தந்த பகுதி வருவாய் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலர்கள் நேரில் சென்று கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவுச் சின்னத்தில் ஆட்சியர் ராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சேலம் மாநகராட்சி அலுவலகம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், சிறைத்துறை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை அதிகாரிகள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

நாமக்கல்லில் காவலர்களுக்கு பதக்கம்

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், காவல்துறையில் எவ்வித புகாருக்கும் இடமின்றி பணிபுரிந்த 43 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கமும், சிறப்பாக பணிபுரிந்த 152 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூய்மை

ப்பணியாளருக்கு பாராட்டு

ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, 60 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த 137 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கும் ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இத்துடன், ஈரோட்டில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை, அவர்களின் வீட்டுக்குச் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து திண்டல் முருகன் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் ஆட்சியர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, எஸ்பி தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீதிமன்றத்தில் விழா

இதேபோல், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணை யாளர் இளங்கோவன், ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் கே.ஏ.பெரியசாமி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரவி, தமாகா அலுவலகத்தில் மாநில பொதுசெயலாளர் விடியல் சேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x