Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி.

சேலம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இவற்றில் மொத்தத்தில், ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல்படி வாக்காளர்கள் விவரம்:

கெங்கவல்லி (தனி) 2,38,253, ஆத்தூர் (தனி) 2,53,800, ஏற்காடு (தனி) 2,82,656, ஓமலூர் 2,94,712, மேட்டூர் 2,85,767, எடப்பாடி 2,84,378, சங்ககிரி 2,73,143, சேலம் (மேற்கு) 2,97,985, சேலம் (வடக்கு) 2,74,776, சேலம் (தெற்கு) 2,59,229, வீரபாண்டி 2,59,441 என 11 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 14,95,165 பேர், பெண் வாக்காளர்கள் 15,08,771 பேர், இதரர்- 204 என மொத்தம் 30,04,140 வாக்காளர்கள் உள்ளனர். நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) , சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 7 லட்சத்து ஆயிரத்து 104 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 937 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 160 என மொத்தம் 14 லட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், தேர்தல் வட்டாட்சியர் தாசில்தார் சுப்பிரமணியன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

58 ஆயிரம் புதிய வாக்காளர்கள்

ஈரோடு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா பெற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 9 லட்சத்து 53 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 3 ஆயிரத்து 332 பெண் வாக்காளர்களும், 104 இதர வாக்காளர்களும் அடங்குவர். 58 ஆயிரத்து 620 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளம், செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x