Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
தென்காசி மாவட்ட விவசாயி களுக்கான குறைதீர் கூட்டம் காணொலி வாயிலாக நடை பெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.
விரைவில் அறுவடை தொடங்க இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொங்கலையொட்டி பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, “தென்காசி மாவட்டத்தில் கனமழையால் நெல், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலநீலிதநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயிர்கள் அறுவடைக்கு முன்பே முளைத்து சேதமடைந்துள்ளன.
வருகிற 29-ம் தேதிக்குள் மழையால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் ஆய்வு செய்து, உரிய பரிந்துரையுடன் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை, வேளாண்துறை அலுவலர்கள் அடங்கிய குழு பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து வருகிறது. தமிழக அரசு நியமித்த குழு 21-ம் தேதி (இன்று) பார்வையிட உள்ளது. விவசாயி பெயர், சர்வே எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ரேஷன் கார்டு, மானாவாரி நிலமா, இறவை நிலமா, எவ்வளவு பாதிப்பு, என்ன பயிர் போன்ற அனைத்து விவரங்களையும் சரியான முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எந்த விவசாயியும் விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
உளுந்து உள்ளிட்ட பயறு வகை பயிர்களுக்கு 90 சதவீத விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு சேதத்துக்கான நிவாரணம் தனியாக வந்துவிடும். பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். விரைவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT