Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களுக்கு சேலம், நாமக்கல், ஈரோட்டில் 47,818 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமில் மருத்துவர்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா முன்னிலையில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அருகில் ஆட்சியர் கா.மெகராஜ்.

நாமக்கல்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் 47,818 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 25,318 முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியின்போது, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செல்வகுமார், சேலம் மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாமக்கல்லில் 8,700 பேர்

நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச அளவில் கரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 5,36,500 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டத்திற்ரு 8,700 தடுப்பூசிகள் வரப்பெற்று அவை மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 100 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ கண்ணப்பன் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

ஈரோட்டில் 13,800 தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 13 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி போட மருந்துகள் வந்துள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, சிறுவல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களுக்கு போடப்படுகிறது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் தடுப்பூசியை அரசு பணியாளர் பாபு என்பவர் போட்டுக் கொண்டார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் போட்டுக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தனி அறையில் அரை மணிநேரம் கண்காணிப்பில் இருந்தனர். மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி, தோப்பு வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் களுக்கு ஒரு மாதத்தில் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x