Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிரு ப்புகள், விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை மற்றும் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் பெருக்கு ஏற்பட்டது.நேற்று முன்தினம் நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அணையை தாண்டி 80 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.
சாலைகள் துண்டிப்பு
இதனால் ஆற்றின் கரையோர குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் தாம்போதி பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஓடியது. பாலத்தை ஒட்டிய முக்காணி பகுதியும் மூழ்கியது. இதனால் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் இவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு பிறகு தண்ணீர் சற்று குறைந்ததை தொடர்ந்து அந்த வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.இதேபோல் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளம் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 2 நாட்களாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் கொங்கராயக்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
குடியிருப்புகள் முழ்கின
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியான புன்னக்காயல் மீனவ கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த கிராமத்தில் உள்ள 2,500 குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்ததால் இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபம், பள்ளிக்கூடம் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தை ஒட்டியுள்ள அகரம் கிராமத்து க்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகரத்துக்கு செல்லும் சாலை, கருங்குளம்- ராமானுஜம்புதூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கொங்கராயகுறிச்சி, ஆழ்வார் தோப்பு, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம், முக்காணி, பழையகாயல், புன்னக்காயல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி கரையோர பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தாமிரபரணி கரையோர பகுதிகளில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 1,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பயிர்கள் சேதம்
இதேபோல் அகரம், முத்தாலங் குறிச்சி, கொங்கராயக்குறிச்சி, தோழப்பன் பண்ணை, செந்திலாம் பண்ணை, கருங்குளம், முக்காணி, ஆத்தூர், ஏரல், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை மற்றும் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.இந்நிலையில் அணைகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் உபரநீர் வெளியேற்றம் படிப்படியாக குறைந்துள்ளது.
மேலும், மழையும் சற்று குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நேற்று காலை முதல் படிப்படியாக குறையத் தொடகியுள்ளது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி வைகுண்டம் அணையை தாண்டி தாமிரபரணி ஆற்றில் 53,000 கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையில், மாலை 4 மணிக்கு 44 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
அமைச்சர் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகள் பாதிப்படைந்திருப்பது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வந்து ஆய்வு செய்தார்.மேலும், ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தாமிரபரணி கரையோர பகுதிகளையும், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 39, காயல்பட்டினம் 49, குலசேகரன்பட்டினம் 33, விளாத்திகுளம் 16, காடல்குடி 5, வைப்பார் 17, சூரன்குடி 20, கோவில்பட்டி 22, கழுகுமலை 12, கடம்பூர் 22, ஓட்டப்பிடாரம் 19, மணியாச்சி 35, வேடநத்தம் 15, கீழஅரசடி 12, எட்டயபுரம் 29, சாத்தான்குளம் 37.2, வைகுண்டம் 51, தூத்துக்குடி 40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT