Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (12-ம் தேதி) அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட உள்ளது.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜெயந்தி விழா நாளை (12-ம் தேதி) நடைபெறுகிறது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பக்தர்களுக்கு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அர்ச்சனையும், சுவாமிக்கு பூக்கள், பழம், துளசி, வெற்றிலை மாலை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கற்கண்டு தவிர்த்து வேறு எந்தப் பிரசாதமும் வழங்கப்படுவதில்லை.
விழா தொடர்பாக கோயில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:
அனுமன் ஜெயந்தி விழாவின் போது 1 லட்சத்து 8 வடைமாலை சாத்துபடி நடைபெறும். வடை மாலை அலங்காரம் நிறைவு பெற்ற பின்னர் பக்தர்களுக்கு வடையைப் பொட்டலமிட்டு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு namakkalnarasimhaswamianjaneyartemple.org என்ற ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு 750 பேர் வீதம் அவர்கள் விருப்பத்துக் கேற்ப கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் செல்ல அனுமதிக்கப்படுவர். டோக்கன் முறையிலும் ஒரு மணி நேரத்திற்கு 750 பேர் வீதம் அனுமதிக்கப்படுவர். வயதானோர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புடையோர், பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துவர வேண்டாம். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT