Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
கிராமங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவிடும் வகை யில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழக வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பதுபோல, காவல்துறையில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களை நியமிக்க தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சேலம் மாவட்டத்தில் 360 விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, சேலம் அடுத்த மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், எஸ்பி தீபா காணிகர் வரவேற்றார். சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பேசியதாவது:
கிராமங்களில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், திருட்டு நடக்காமல் தடுக்கவும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிக்கடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களை சந்தித்து பேசுவர். அவர்களிடம் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ஏழை மாணவர்கள் 25 பேருக்கு இலவச நோட்டு, புத்தகங்களை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழங்கினார்.
நாமக்கல்லில் 382 பேர்
நாமக்கல்லில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் நியமன விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சக்திகணேசன் தலைமையில் நடந்தது.கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்களுக்கான கையேட்டை வழங்கி அவர் பேசும்போது, அனைத்து முக்கிய நிகழ்வுகள், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் தகவல் கொடுப்பவர்கள் சம்பந்தமான விவரங்களை ஒரு வார காலத்திற்குள் கையேட்டில் பூர்த்தி செய்து தங்களது பராமரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாய் கிராமம் மற்றும் குக்கிராமங்களில் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கும் நேரடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றார். மாவட்டம் முழுவதும் 382 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் நியமனம்
கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி சரவணன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி சரவணன் பேசியதாவது:
கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத செயல்கள், குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், சந்தேகப்படும்படியான நபர்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு வசதியாக, ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் ஒரு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கிராமங்களில் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பவம் தவிர்க்கப்படும். மேலும், பொதுமக்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT