Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM

கேரளாவில் வாத்துப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் அச்சம்

நாமக்கல்

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள வாத்துப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் பரவி உள்ளதால், நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்துப்பண்ணைகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில பண்ணைகளில் திடீரென வாத்துகள் இறந்தன. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சோதனை செய்த 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (எச்5என்8) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள வாத்துப்பண்ணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். மேலும், நோய் பரவலைத் தடுக்க, ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள பண்ணைகளில் இருக்கும் சுமார் 36 ஆயிரம் வாத்துக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அப்பகுதி தனி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலால் இறப்புகள் பதிவாகும் பகுதிகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் மனிதர்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை அடையாளம் காணும் முயற்சியை கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் நாமக்கல் பகுதி கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு நடவடிக்கையில் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தவிர, முட்டை, கோழி அனுப்புவதில் சிக்கல் ஏற்படுமா என்ற அச்சமும் பண்ணையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் சுற்றுவட்டார கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவற்றில் சுமார் 2 கோடி முட்டைகள் மற்றும் கறிக்கோழிகள் கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x