Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில், தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகளில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் நேற்று மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும், புத்தாண்டு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர். கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, இறைவனை தரிசனம் செய்தனர்.
சேலம் டவுன் ராஜகணபதி கோயிலில் நேற்று அதிகாலை முதல் மக்கள் திரளாக வந்து வழிபட்டனர். ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. முன்னதாக தேன், பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ஈசனை தரிசித்தனர். கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரெங்கநாத சுவாமி கோயில், சின்ன திருப்பதி பெருமாள் கோயில், அழகாபுரம் பெருமாள் கோயில், பட்டைக்கோயில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், அம்மாப்பேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோயில், இரண்டாவது அக்ரஹாரம் லஷ்மிநாராயணன் கோயில், குமரகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், ஊத்துமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக , ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் திரளாக கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
அதேபோல, புத்தாண்டை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, பிரார்த்தனை செய்தனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், நான்கு ரோடு குழந்தை ஏசு பேராலயம், சூரமங்கலம் தூய இருதய ஆண்டவர் தேவாலயம், அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலயம், மணக்காடு புனித அந்தோணியார் தேவாலயம், அழகாபுரம் தூயமிக்கேல் தேவாலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, புத்தாண்டு பிறப்பை வரவேற்று, வரும் ஆண்டில் அனைத்து வளம் பெற்று மக்கள் அமைதியுடன் வாழ பிரார்த்தனை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT