Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு, விழிப்புணர்வு பணியை சுகாதார ஊழியர்கள் தீவிரப்படுத்த வேண்டும் சேலம் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சேலம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு, மாநகர நல அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கரோனா நோய் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னேற்பாடுகளை முறையாக செய்யாத திருமண மண்டபங்கள் மற்றும் பொது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

வணிக நிறுவனங்களில் பணிபுரிவோர், மகளிர் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்குபவர்கள், உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தைகளில் உள்ள வியாபாரிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சளி பரிசோதனை தவறாது எடுப்பதை சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், நகர் நல மைய மருத்துவர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு விழாக்களுக்கு தடை

சேலம் மாநரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் கூறியதாவது:

பொதுமக்கள் நள்ளிரவில் ஒரே இடத்தில் கூடி புத்தாண்டு கொண்டாடுவதை தடுக்க கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபடவுள்ளனர். ஓட்டல், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகரின் முக்கிய சாலைகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புத்தாண்டு கொண்டாட கூட்டம் கூட்டமாக சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் விதிமுறை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (31-ம் தேதி) இரவு முதல் நாளை அதிகாலை வரை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x