Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பாவை பாடப்பட்டு வடக்குப்புற சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பெருமாள் - தாயாருடன் பல்லக்கு பவனியில் சொர்க்கவாசலை கடந்து வந்து, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். ஆன்-லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோல, சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோயில், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோயில், பட்டைகோயில் பாண்டுரங்கநாதர் கோயில், 2-வது அக்ரஹாரம் லஷ்மிநாராயண சுவாமி கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக நடந்தது.
நாமக்கல் ரங்கநாதர் கோயில்
நாமக்கல்லில் பழமைவாய்ந்த ரங்கநாதர் கோயிலில் கார்க்கோடகன் என்னும் பாம்பின் மீது அனந்த சயன நிலையில் ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குடவறைக் கோயிலான இக்கோயிலில், அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடந்தது. ரங்கா, ரங்கா கோஷம் முழங்க சொர்க்கவாசலைக் கடந்து வந்த பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கஸ்தூரி அரங்கநாதர் கோயில்
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில், பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நேற்று அதிகாலை நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தேவி பூதேவி சமேதரராக நம்பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபட்டனர்.இதேபோல், கொடுமுடி மகுடேஸ்வரர் வீர நாராயணப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி, தருமபுரி
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில், நேற்று அதிகாலை 4.15 மணிக்கு சுவாமி சொர்க்க வாசல் வழியாக வந்தார். தொடர்ந்து பெருமாள் கோயிலைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வேப்பனப்பள்ளி அடுத்த பூதிமூட்லு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான கோதண்டராம சுவாமி கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
தருமபுரி மாவட்டம் மணியம்பாடி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்றார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பூதிமுட்லு கோதண்டராம சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமர்.வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக தேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகிரிநாதர் பெருமாள். அடுத்தபடம்: ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசலைக் கடந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசிபடம்: கிருஷ்ணகிரி வேணுகோபால சுவாமி கோயிலில் சுவாமி சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT