Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு வைபவம் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் பள்ளிகொண்டாவில் சுவாமி தரிசனத்துக்கு தடையால் பக்தர்கள் அதிருப்தி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அடுத்த படம்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் உள்ள  உத்திர ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கடைசிப் படம்: வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ஜவ்வரிசி மற்றும் தானியங்களால்  வராக பெருமாள் அவதாரம் வரையப்பட்டிருந்து. படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்/ராணிப்பேட்டை

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த பக்தர்கள் சொர்க்க வாசல் திறந்ததும் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் மார்கழி மாதம் ஏகாதசி தினத்தில் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு சுவாமி எழுந் தருளும் வைபவம் சிறப்பாக நடைபெறும். அதிகாலையில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காத்திருப்பார்கள். நேற்று வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தில் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தடை

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா பாலாற்றங்கரையில் உள்ள பிரசித்திப் பெற்ற உத்திர ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. கரோனா பரவல் அச்சத்தால் ராஜ கோபுர வாசல் வழியாக சுவாமி எழுந்தருளுவதை பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டது.

வழக்கமாக, ராஜகோபுர வாசல் வழியாக சுவாமி எழுந் தருளும்போது எதிரே உள்ள மண்டபம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால், மண்டபம் அமைந்த பகுதியில் நேற்று தகரத்தாலான தடுப்புகளை வைத்து சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால், சுவாமியைக் காண குளிரிலும் காத்திருந்த பக்தர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

வேலூர் வேலப்பாடியில் உள்ள பெருமாள் கோயிலில், ரங்காபுரம் கோதண்டராமர் கோயில்களில் நேற்று காலை சொர்க்க வாசல் வழியாக சுவாமி எழுந்தருளி பக்தர் களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அடுத்த திருப் பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடைபெற்றது.

மற்ற பெருமாள் கோயில்களில் ராஜகோபுரம் வழியாக உற்சவ மூர்த்தி எழுந்தருளும் நிலையில், இந்தக் கோயிலில் மட்டும் உற்சவருக்கு பதிலாக மூலவரே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x