Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நேற்று பல்வேறு கிராமங்களில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டபேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகை ஊராட்சி சீரங்கனூர், இருப்பாளி ஊராட்சி, எடப்பாடி அடுத்த வெள்ளார் நாயக்கன்பாளையம் மற்றும் ஆலச்சம்பாளையம், கொங்கணாபுரம் அடுத்த எட்டிக்குட்டை மேடு ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சேலம் ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில், முதல்வர் பழனிசாமி, மினி கிளினிக்கை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இருப்பாளி மற்றும் ஆலச்சம்பாளையத்தில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்டோர் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அடிக்கடி ஏற்படக்கூடிய சிறு பிரச்சினைகளுக்கு உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில், மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இதை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இருப்பாளியில் நடந்த விழாவில், ரூ.47.20 லட்சம் மதிப்பிலான 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார், ரூ.6.56 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆலச்சம்பாளையத்தில் நடந்த விழாவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவ, மாணவியர், முதல்வருக்கு, நினைவுப் பரிசு வழங்கினர். விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சித்ரா, வெற்றிவேல், ராஜா, மருதமுத்து, சின்னதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சேலம் மாவட்டம் இருப்பாளியில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பொன்னையன், ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர். படம்: எஸ். குரு பிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT