Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM

சேலம் அழகிரிநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்கு ஆன்-லைன் பதிவு தொடக்கம்

சேலம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு வரும் 25-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றியும், கூட்ட நெரிசலின்றி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் குமரவேல் கூறியதாவது:

வரும் 25-ம் தேதி காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும். விழாவில் பக்தர்கள் பங்கேற்க ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பக்தர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப இலவச தரிசனம் அல்லது ரூ.25 கட்டணம் செலுத்தி விரைவு தரிசனத்தை பயன்படுத்திக்கொள்ளாலாம். தரிசனத்துக்கு வரும் போது ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட் மற்றும் ஆதார் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

கோயில் நுழைவு வாயில், பிரகாரங்கள் சன்னதி ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்லும் வழிகளிலும், வரிசைகளிலும் சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். பக்தர்கள் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்னர்தான் கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவர். பதிவின்போது வரும் 25-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அவர்கள் கோயிலுக்கு வரும் நேரத்தை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நேற்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் https://tnhrce.gov.in/ இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x