Published : 18 Dec 2020 03:18 AM
Last Updated : 18 Dec 2020 03:18 AM

லத்துவாடி கிராமத்தில் மினி கிளினிக் திறப்பால் மருத்துவ சிகிச்சைக்கு 10 கி.மீ. செல்வது தவிர்ப்பு

வீரகனூர் அடுத்த லத்துவாடி கிராமத்தில் நேற்று திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கில் மருத்துவரிடம் சிகிச்சை பெற காத்திருந்த கிராம மக்கள்.

சேலம்

ஆத்தூர் அடுத்த வீரகனூர் லத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளதால், மருத்துவ சிகிச்சைக்கு கடந்த காலங்களைப் போல 10 கிமீ செல்வது தவிர்க்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

வீரகனூர் லத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இங்கு தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருப்பர். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை கிளினிக் செயல்படும்.

மினி கிளினிக் திறப்பு விழா அன்றே கிராம மக்கள் பலர் சிகிச்சைக்கு வந்தனர். இதில், சசிகலா என்பவர், தனது 6 மாத மகள் ருத்ரா -க்கு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கூறும்போது, “குழந்தைக்கு சளி பிடித்துள்ளது. அதனால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தேன். இதற்கு முன்னர் 10 கிமீ தூரத்தில் இருக்கும் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. இப்போது, எங்கள் ஊரிலேயே மருத்துவர் இருப்பது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது” என்றார். இதே கருத்தை அக்கிராமத்தில் பலரும் தெரிவித்தனர்.

மினி கிளினிக்கில், இருதய பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளன.

இதுதொடர்பாக மருத்துவத் துறை அதிகாரிகள் கூறும்போது, “காய்ச்சல், தலைவலி என்றால் மருந்துக் கடைகளுக்குச் சென்று ஏதேனும் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் கிராம மக்களிடம் உள்ளது. இப்போது, மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளதால், இப்பிரச்சினைகள் தவிர்க்கப்படும். மேலும், சில நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உயர் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு ஏற்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x