Published : 18 Dec 2020 03:18 AM
Last Updated : 18 Dec 2020 03:18 AM
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் ஆற்றோரம் காய்கறி கடைகளில் நேற்று காலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியதால், வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் பகல் நேரத்தில் பனி மூட்டம் இருந்ததால், சாலைகளில் சென்ற வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் சென்றனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: தம்மம்பட்டி 50, காடையாம்பட்டி 2.5, வீரகனூர் 62, கரியகோவில் 30, கெங்கவல்லி 2.5, ஆணைமடுவு 29, வாழப்பாடி 9.5, ஏற்காடு 20, ஓமலூர் 2, சங்ககிரி 4.2. சேலம் 2.1, ஆத்தூர் 37.70, பெத்தநாயக்கன்பாளையம் 37 மிமீ மழை பதிவானது.
நாமக்கல்லில் விடிய விடிய மழை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கிது. இரவு தொடங்கிய மழை நேற்று பகலிலும் நீடித்தது. அவ்வப்போது லேசாகவும், வேகமாகவும் மழை பெய்தது.இதனால் சாலையின் தாழ்வான பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியது. குளிர் மற்றும் மழை காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில்: எருமப்பட்டி 20, மங்களபுரம் 10.20, மோகனூர் 9, நாமக்கல் 12, பரமத்தி வேலூர் 6, புதுச்சத்திரம் 5, ராசிபுரம் 17.20, சேந்தமங்கலம் 17.40, திருச்செங்கோடு 3, ஆட்சியர் அலுவலகம் 9, கொல்லிமலை செம்மேடு 18 மி.மீ. மழை பெய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT