Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM
நாகை மாவட்டத்தில் வேதா ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:
தொழில்துறையை மேம்படுத்தும் வகையில், அதிகப்படியான தொழில் முதலீட்டுகளை தமிழகம் பெற்று வருகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் வேதா ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. காவிரி டெல்டா பகுதியான நாகை, விவசாயம் சார்ந்த மாவட்டம். இதனால், தொழில் வளர்ச்சி இல்லை. இங்கிருந்து கணிசமான இளைஞர்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்துக்கு இடம்பெயர்கிறார்கள். இதையடுத்து, ஆயத்த ஆடை அலகு அமைப்பது தொடர்பாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் இரண்டு இடங்கள் பார்வையிடப்பட்டன.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஜவுளி ப்பூங்கா திட்டம் மற்றும் எம்.எஸ்.எம்.இ. திட்டத்தின் கீழ் ரூ.96.86 கோடி திட்ட செலவில் 36 அலகுகள் கொண்டு, வேதா ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்க விரிவானசெயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் மானியமாக ரூ.37.80 கோடி, மாநில அரசின் மானியமாக ரூ.23.62 கோடி கோரப்பட்டுள்ளது. இந்த ஜவுளிப் பூங்காவுக்கு, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை மற்றும் தமிழ்நாடு தொழில் கொள்கையின் கீழ் அரசு மானியம் மற்றும் சலுகைகள் வழங்க வழிவகை உள்ளது.
ஆயத்த ஆடை தயார் செய்யும் தொழில்முனைவோர் இந்த பூங்காவில் பங்குபெற முன்வர வேண்டும். திருப்பூரில்போதுமான வசதிகள் இல்லாததால், பிறமாவட்டங்களில் தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. தொழிலாளர்களை தங்கவைப்பது, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாலும் திருப்பூரில் காலதாமதமாகிறது. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருப்பதால், அவற்றை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT