Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
சேலம் ஓமலூர் அருகே சரக்குவேன் மீது லாரி மோதியதில், சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
எடப்பாடி தாலுகா குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று (15-ம் தேதி) காலை சரக்குவேனில் சாலைப் பணிக்காக காடையாம்பட்டிக்கு புறப்பட்டு வந்தனர். வேனை ஓட்டுநர் பழனிசாமி என்பவர் ஓட்டினார்.
சேலம் விமான நிலையம் அருகேயுள்ள குப்பூர் பிரிவு ரோட்டில் வேன் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென சாலையை கடந்தார். அவர் மீது வேன் மோதிவிடாமல் தவிர்க்க வலது பக்கம் வேனை ஓட்டுநர் திருப்பியபோது, குஜராத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது.
இதில், வேனில் வந்தவர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஓமலூர் போலீஸார் விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மணிகண்டன் (7), மெய்வேல் (55) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் எஸ்பி தீபா காணிகர் விசாரணை நடத்தினார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் களை சேலம் ஆட்சியர் ராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT