Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நடந்த காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்.

சேலம்

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் கூட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டுக்குழு நிர்வாகிகள் செல்வராஜ், ராமமூர்த்தி, தங்கவேலு உள்ளிட்ட 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, திமுக மாவட்டச் செயலாளர் முத்துசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, துளசிமணி, சுப்பு, பொன்னையன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் மறியல்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாமக்கல் கொசவம்பட்டி பிரிவு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். தொடர்ந்து புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

கிருஷ்ணகிரியில் நடந்த காத்திருப்புப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் பழனி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், சிவராஜ், கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் டில்லி பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உட்பட 131 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x