Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டு குழு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் முற்றுகை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சேலம் 5 ரோடு அருகேயுள்ள தனியார் நிறுவனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் விசிக மண்டலச் செயலாளர் நாவரசன் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டனர்.
அப்போது, புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல, அம்மாப்பேட்டை யில் உள்ள தனியார் நிறுவனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் பொன்ரமணி தலைமையில் முற்றுகையிட்ட 20 பேர் மற்றும் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட 20 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்துக்கு சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விவசாயிகள் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், விவசாய சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து காத்திருப்புப் போராட்டத்துக்கு முயன்றபோது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
சேலத்தில் முற்றுகை போராட்டம் மற்றும் ரயில் மறியல், காத்திருப்புப் போராட்டத்துக்கு முயன்ற 353 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல்லில் 300 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல்லில் பிரதேசக் குழு செயலாளர் பி.ஜெயமணி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி. கு.சிவராஜ். கிளைச் செயலாளர் செங்கோட்டையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ராசிபுரம், பள்ளிபாளையம், எலச்சிபாளையம், புதுச்சத்திரம் என மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 300 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோட்டில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் நேற்று காலை தொடங்கிய போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை தாங்கினார்.ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி, மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், கம்யூனிஸ்ட் மற்றும் கொமதேக நிர்வாகிகள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
பெருந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகர செயலாளர் பி.சுந்தர்ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வி.பி. பழனிசாமி, எஸ்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்த காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பழனி தலைமை வகித்தார். போராட்டத்தை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தளி ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 38 பேரை போலீஸார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி பழைய பேட்டை காந்திசிலை அருகே நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஓசூர் வட்ட செயலாளர்கள் தேவராஜ், தலைவர் ராஜா ரெட்டி, தேன்கனிக்கோட்டை வட்ட செயலாளர் அனுமப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி
தருமபுரியில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திய 80 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் மல்லையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதே கூட்டமைப்பினர் அரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரு இடங்களிலும் 22 பெண்கள் உட்பட 149 பேரை போலீஸார் கைது செய்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT