Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது பாசிப்படலம் அகற்றும் பணி தீவிரம்

மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் படர்ந்துள்ள பாசிப்படலத்தை பொதுப் பணித்துறை ஊழியர்கள் மோட்டார் படகில் சென்று நுண்ணுயிர் கரைசலை தெளித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பு பாசன ஆண்டில் முதன்முறையாக 105 அடியைக் கடந்துள்ளது. இதனிடையே, அணை நீர்பரப்பில் படர்ந்துள்ள பாசிப்படலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் நேற்று (12-ம் தேதி) வரை விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,464 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 8,156 கனஅடியானது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்திறப்பை விட நீர்வரத்து அதிகம் இருப்பதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 19 நாட்களில் 6.97 அடி அதிகரித்தது.

நேற்று நீர்மட்டம் 105.17 அடியாகவும், நீர் இருப்பு 71.70 டிஎம்சி-யாகவும் அதிகரித்தது. நடப்பு பாசன ஆண்டில் அணை நீர்மட்டம் 105 அடியை முதல்முறையாக தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாசிப்படலம்

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது, அதன் நீர் தேக்கப் பகுதிகள் வறண்டு காணப்படும். இந்த இடங்களில் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயம் மேற்கொண்டு, அணை நீர்மட்டம் உயருவதற்குள் பயிர்களை அறுவடை செய்துவிடுவர்.

அணையில் நீர்மட்டம் உயரும்போது, பயிர் கழிவுகள் நீரில் மூழ்கி, பாசிப்படலம் ஏற்படுகிறது. மேலும், விவசாயத்துக்கு பயன்படுத்திய பூச்சிக் கொல்லி, உரம் போன்றவற்றாலும் பாசிப்படலம் அதிகரித்து, அதில் இருந்து துர்நாற்றமும் எழுகிறது. காற்று மற்றும் நீரோட்டம் காரணமாக, பாசிப்படலம் அடித்து வரப்பட்டு, 16 கண் மதகு பகுதியில் குவிந்துள்ளது. இதை, திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கரைசலை தெளித்து தொடர்ந்து, கட்டுப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x