Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.1.17 கோடியில் தீயணைப்பு நிலையம் உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.1.17 கோடி செலவில் நிரந்தர தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2018 பிப். 2-ல் தீ விபத்து ஏற்பட்டதில் வீர வசந்த ராய மண்டபத்தின் தூண்கள் மற்றும் கூரைப்பகுதி சேதமடைந்தது. அப்பகுதி தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இத் தீவிபத்தைத் தொடர்ந்து மேற்குச் சித்திரை வீதியில் கோயிலின் வாகனம் நிறுத்தும் பகுதியில் தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இங்கு தீயணைப்பு வீரர்கள் அமரக்கூட போதுமான இட வசதி யில்லை. எனவே, தற்காலிக தீயணைப்பு நிலையத்தை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நிரந்தரக் கட்டிடத்துக்கு மாற்றவும், வீர வசந்தராய மண்டபத்தை விரைவாகச் சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நிரந்தரத் தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.1.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது வேளாண் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் காலி செய்யப்பட்டு, அந்த இடத்தில் நிரந்தரத் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும், என்றார்.

கோயில் நிர்வாகத் தரப்பில், தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்த ராய மண்டபத்தைச் சீரமைக்க நாமக்கல் அருகே கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கற்களைக் கோயிலுக்குக் கொண்டு வர போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், எவ்வளவு காலத்துக்குள் மீனாட்சியம்மன் கோயிலுக்கான நிரந்தரத் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்? என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். வீர வசந்த ராய மண்டபத்துக்கான கற்களை நாமக்கல்லில் இருந்து கொண்டு வர அம்மாவட்ட போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.18-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x