Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தனியார் அலோபதி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

மதுரை

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தனியார் அலோபதி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள். அலோபதி மருத்துவர்களைப் போன்று ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரசு மருத்துவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

மதுரையில் அனைத்து தனியார் மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிகிச்சைகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வழக்கம்போல் பணிக்குச் சென்றனர்.

தேனி

தேனி, சின்னமனூர், கம்பம், போடி, பெரியகுளம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. இதில் 545 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். ஸ்கேன் மையங்களும் இயங்கவில்லை. அவசர சிகிச்சை மட்டும் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 தனியார் மருத்துவமனைகள், 500 சிகிச்சை மையங்கள் நேற்று காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. கரோனா மற்றும் அவசரச் சிகிச்சைகளைத் தவிர மற்ற சிகிச்சைகள் அளிக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ராமநாதபுரம் கிளை சார்பில் மருத்துவர்கள் ஆலோசனைக் கூட்டம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் டி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டி.ஆனந்த சொக்கலிங்கம், நிதி செயலாளர் அக்னெலா தெரசா ஜோஸ்பின் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் சின்னத்துரை அப்துல்லா, திருமலைவேலு, ரவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. திண்டுக்கல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 87 பெரிய மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 860 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x