Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமே வசூலிக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை

கடலூர்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, தற்போது அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ.13,600 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த கல்வியாண்டியில் ரூ.4,00,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது கட்டணமாக ரூ.5,44,370 வசூலிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்கட்டணம் என்பது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரியில் வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலானது.

நடப்பாண்டின் கட்டணமாக ரூ.5,44,370, சென்ற ஆண்டு நிலுவைத்தொகை ரூ.1,47,370 மற்றும் விடுதி கட்டணம் ரூ.80,000 என மொத்தம் ரூ.7,80,000-யை உடனடியாக செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், எப்படி ரூ.7,80,000 கட்டணத்தை கட்டணத்தை கட்ட முடியும்.

எனவே ராஜா முத்தையா மருத்துவகல்லூரியை அரசுடைமையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் திரும்ப பெற வேண்டும்.. இவ்விவகாரத்தில் தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், மாணவர்களையும், பெற்றோர்களையும் , மக்களையும் அணி திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x