Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மறியலில் ஈடுபட்டவர்கள் கைது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று வேலூர் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். அடுத்த படங்கள்: ஜோலார்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய போராட்டக் குழுவினர். திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள். கடைசிப் படம்: ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/ தி.மலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற மறியலில் பங்கேற்றோர் கைது செய்யப் பட்டனர். பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுடெல்லியில் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் நகர்புறங் களில் சுமார் 2 சதவீதம் கடைகள் மட்டுமே மூடியிருந்தன. ஆட்டோ, பேருந்துகள் வழக்கம்போல் இயங் கின. கிராமப்புறங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

வேலூர் அண்ணா சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர பொறுப்பு செயலாளர் லோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் மாவட்ட குழு உறுப்பினருமான லதா உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

பின்னர், வேளாண் சட்டங் களுக்கு எதிராக முழக்கமிட்டபடி அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் லதா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய் தனர். மறியல் போராட்டம் காரண மாக, அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

தொடர்ந்து, வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, ஏஐடியுசி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தயாநிதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சிம்புதேவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பரசுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இளங்கோ உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சாலையில் தானியங்களை கொட்டி வைத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

மாவட்டம் முழுவதும் 7 இடங் களில் நடைபெற்ற போராட்டத்தில் 120-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இ.கம்யூ னிஸ்ட் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் 20 பேரை கைது செய்தனர்.

அதேபோல், ஜோலார்பேட்டை எஸ்.கோடியூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி முன்பாக அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மறியல் நடைபெற் றது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 25 பேரை ஜோலார்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட் டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக தோழமை கட்சியினர், போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

மாவட்டம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 736 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நீதிமன்ற பணியை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர். குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பிற் பகலுக்கு பிறகு ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன. மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. முழு அடைப்பு போராட்டம் என்றிருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x