Published : 30 Nov 2020 03:12 AM
Last Updated : 30 Nov 2020 03:12 AM
தூத்துக்குடி மாவட்டத்தை கரோனா பரவல் இல்லாத மாவட்டமாக உருவாக்க திரையரங்கு உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். ஆனால், முழுமையாக இன்னும் கரோனா கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, பொதுமக்கள் அதிகமாக கூடும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக திருமண மண்டபத்தை பதிவு செய்ய வருபவர்களிடம் மண்டப உரிமையாளர்கள் முன்னதாகவே அரசின் விதிமுறைகளை தெரிவிக்க வேண்டும்.
மண்டபத்துக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். மேலும் சானிடைசர் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவற்றை பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர், கை கழுவும் திரவம் உள்ளிட்டவற்றை மண்டப உரிமையாளர்களே வழங்கிவிட்டு அதற்கான செலவினத் தொகையை மண்டபம் பதிவு செய்தவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் கரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வின்போது முதல் வாரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் எச்சரிக்கை செய்யப்படும். இரண்டாவது வாரத்தில் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்களை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வழிபாட்டுத் தலங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இருப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கரோனா தொற்று இரண்டாவது அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் இல்லையென்ற நிலையை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா (தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT