Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் வனச்சரகர், அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவு

சேலம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் வனச்சரகர் மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இருவரது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மேட்டூர் வனச்சரகராக பணிபுரிந்து வந்தார்.

சொத்து குவிப்பு

இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பல இடங்களில் நிலம் வாங்கியதாக 2004-ம் ஆண்டு ஜூனில் சேலம் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில், மோகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.26.79 லட்சம் மதிப்பிலான நிலத்தை அவரது மனைவி சித்ராமணி பெயரில் வாங்கி யிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வங்கி டெபாசிட்

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வனச்சரகர் மோகன், அவரது மனைவி சித்ராமணி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார்.

மேலும், இருவர் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துள்ள ரூ.1,06,950 வட்டியுடனும், சேலம் மெய்யனூரில் உள்ள 2,400 சதுரஅடி வீட்டு மனை, ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள 1,045 சதுர அடி வீட்டு மனை, சேலம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள 3,600 சதுரஅடி வீட்டு மனை ஆகியவற்றை அரசுடைமையாக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x