Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து இயங்குவதும், இயங்காமல் போவதும் இனி வியாபாரிகளின் கைகளில்தான் உள்ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மணிகண்டத்தை அடுத்த கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் பழனிசாமி 2017 செப்.5-ம் தேதி திறந்து வைத்தார். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி கள்ளிக்குடிக்குச் செல்வதை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடர்ந்து தவிர்த்து வந்தனர்.
இந்தநிலையில், கள்ளிக்குடி மார்க்கெட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி பூட்டப்பட்டது. அதன்பின், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மார்க்கெட் இயங்கி வந்தது.
இதனிடையே, காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, கள்ளிக்குடி மார்க்கெட்டை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மற்றொரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவற்றை விசாரித்த நீதிமன்றம் காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்தது. ஆனால், தடையை நீக்கி காந்தி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, 8 மாதங்களுக்குப் பிறகு காந்தி மார்க்கெட் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறியது: நீதிமன்ற வழிகாட்டு குழு காந்தி மார்க்கெட்டை ஆய்வு செய்ய விரைவில் வரவுள்ளது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கைதான் இறுதி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது. டிச.1-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இனிமேல் மார்க்கெட் வெளியே போனால் அதற்கு நீங்கள்தான் காரணம். காந்தி மார்க்கெட் இனி தொடர்ந்து செயல்படுவதும், செயல்படாமல் போவதும் உங்கள் கையில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக, காந்தி மார்க்கெட்டை திறக்க வந்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜனுக்கு வியாபாரிகள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். காந்தி மார்க்கெட் பிரதான நுழைவு வாயிலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி அமைச்சர் நடராஜன் மார்க்கெட்டை திறந்துவைத்தார்.
மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் காந்தி மார்க்கெட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT