Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

மதுரை ரயில் நிலையம் முன் சாலை மறியல் செய்த தொழிற்சங்கத்தினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்கி ரூ.600 கூலி வழங்க வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மதுரை ரயில் நிலையம் முன் நேற்று சாலை மறியல் நடந்தது. இதில் சு.வெங்கடேசன் எம்.பி., சிஐடியூ, தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டியுசிசி, எம்எல்எப், டிடிஎஸ்எப், எஸ்டிடியு ஆகிய தொழிற்சங்கத்தினர், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம், கருமாத்தூர், அலங்காநல்லூர், சோழவந்தான், சமய நல்லூர், உசிலம்பட்டி, சேடபட்டி உட்பட 11 இடங்களில் சாலை மறியல் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட 390 பெண்கள் உட்பட 1075 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று சாலை மறியல் செய்தனர். இதில் சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் முருகன் உட்பட 58 பேர் கலந்து கொண்டனர். இவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, வத்திராயிருப்பு, வில்லிபு த்தூர், சிவகாசி, ராஜபாளையம் உட்பட 39 இடங்களில் சாலை மறியல் செய்த 3,027 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் நேரு சிலை அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், மாவட்ட ஏஐடியூசி செயலாளர் டி.சி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர். (வலது) ஆண்டிபட்டியில் நடந்த சாலை மறியலில் கலந்து கொண்ட கம்பம் ராமகிருஷ்ணன், சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.முருகன் உள்ளிட்டோர்.

சிவகங்கை

சிவகங்கை அரண்மனை வாசல் முன் சாலை மறியல் செய்த முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் வீரையா உட்பட 120 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் மானாமதுரை, எஸ்.புதூர், சிங்கம்புணரி, கல்லல், திருப்பத்தூர், காரைக்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காளையார் கோவில் உட்பட 10 இடங்களில் சாலை மறியல் நடந்தன. மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த மறியலில் 669 பேர் கைதாகினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட 16 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 805 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், பரமக்குடி எல்ஐசி அலுவலகங்களில் அனைத்து பணி யாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரேமலதா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி வேலைநிறுத்தம் குறித்து விளக்கிப் பேசினார்.

தேனி

தேனியில் நேரு சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் டி.சி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். போராட்டத்தை ஆதரித்து திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் (பொறுப்பு) செயலாளர் பெருமாள் ஆகியோர் பேசினர். பெரியகுளத்தில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் போடி, கம்பம், கூடலூர், ஆண்டிபட்டி, சிலமலை உட்பட மாவட்டத்தில் 15 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்து 476 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 23 இடங் களில் நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 1420 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x