Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM
கார்த்திகை தீபத்திருவிழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபத்திருவிழாவிற்குத் தேவையான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோட்டில் பச்சப்பாளி, கொல்லம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, நசியனூர், புன்செய் புளியம்பட்டியை அடுத்த அலங்காரிபாளையம், பவானிசாகரை அடுத்த செல்லம்பாளையம், வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஈரோட்டில் தயாராகும் அகல் விளக்குகள் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அகல்விளக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடந்துவருகிறது. மழைக்காலமாக இருப்பதால், மண்ணை பதப்படுத்தி, விளக்குகள் தயாரிப்பதில் சிக்கல் உள்ளது. பனிப்பொழிவு காரணமாக விளக்குகளை காய வைக்க முடியாத நிலை உள்ளது. 100 எண்ணிக்கை கொண்ட சிறிய தீப விளக்கு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளக்குகளின் அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது, என்றனர்.
கூடுதலாக விளக்குகள் உற்பத்தி
நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் தீப விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.இதுதொடர்பாக பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளர் எஸ். சங்கர் கூறுகையில், ஒரு முகம் முதல் 4 முகம் கொண்ட விளக்குகள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. விளக்குகளின் அளவு, வடிவமைப்பிற்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் தொழிலில் எந்த பாதிப்பும் இல்லை. விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதலாக விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்தும் விளக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT