Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வுத் தளங்களை பள்ளி மாணவ, மாணவியர் பார்வை

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தொல்லியல் ஆர்வலர்கள் பார்வையிட்டனர்

தூத்துக்குடி

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு தளங்களை பள்ளி மாணவ-மாணவியர் நேற்று பார்வையிட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும், அங்குள்ள பல தரப்பட்ட இனம், மொழி ஆகிவற்றால் வளமான பண்பாடு, வரலாறு இருக்கும். அவற்றைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மாணவர் களிடம் ஏற்படுத்தவும், மரபு சார்ந்த சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் 100 ஆண்டு களைக் கடந்த பாரம்பரியம் மிக்க இடங்களை உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கிறது.

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம், பரணி வரலாற்று மையம் மற்றும் திருநெல்வேலி ட்ரெண்ட் செட்டேர்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு மரபு நடை பயணம் ஏற்பாடு செய்திருந்தன. இதில் தொல்லியல் ஆர்வலர்கள் 60 பேர் பங்கேற்றனர்.

இவர்கள் மரபு நடை பயணமாக ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு வந்தனர். அங்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அகழாய்வு பற்றி விளக்க மளித்தார். பின்னர் சிவகளை சென்ற அவர்களுக்கு வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அங்கு நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி விவரித்தார். அப்பொருட்களை அவர்கள் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி, பரணி வரலாற்று மைய ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் மற்றும் ஜேசிஐ திருநெல்வேலி ட்ரெண்ட் செட்டர்ஸ் தலைவர் சுப்புலட்சுமி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x