Published : 16 Nov 2020 03:13 AM
Last Updated : 16 Nov 2020 03:13 AM

சேலத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 590 பேர் கைது தருமபுரியில் 367 பேர் சிக்கினர்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், சட்ட விரோத மது விற்பனை செய்த 590 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட மற்றும் மாநகர போலீஸார் கடந்த இரு நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேட்டூர், மேச்சேரி, கொளத் தூர், வனவாசி, சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், வீரகனூர் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையில் சட்ட விரோதமாக மது, கள்ளச் சாராயம், தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 380 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே போல சேலம் மாநகரில் நடந்த சோதனையில் 210 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400-க்கும் மேற்பட்ட மது பாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

தருமபுரியில் 367 பேர் கைது

தருமபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து தீபாவளி நேரத்தில் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய போலீஸாரும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர்கள், ரகசிய தகவலின் பேரில் கண்டறியப்பட்டவர்கள் என மது பாட்டில் பதுக்கி விற்ற 367 பேரை போலீ ஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 6,012 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.அதேபோல, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 227 நபர்களை கைது செய்த போலீஸார் 2500-க்கும் மேற்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பொட்டலங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x