Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நாளை (நவ.15) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா ஊரடங்கால் பக்தர்கள் வீடுகளிலேயே விரதம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற இத்திருவிழா நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
கோயில் உள்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சன்னதிக்கு இடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. யாகசாலையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதரை எழுந்தருளச் செய்து கும்பபூஜை நடக்கிறது.
தொடர்ந்து பூர்ணாஹுதி தீபாராதனையாகி யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு வரும் போது தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மாலையில் அதே இடத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுகின்றன.
கரோனா பரவலால் பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கோயிலில் விரதமிருக்க அனுமதியில்லை.
வழக்கமாக சஷ்டி விழாவின் போது மாலையில் நடைபெறும் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி பிரகார உலா இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கடல் மற்றும் நாழிகிணற்றில் நீராடவும், காது குத்தவும், தேங்காய், பழம், மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரவும்அனுமதியில்லை.
திருவிழா நிகழ்வுகள், சூரசம்ஹாரம் மற்றும் 21-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை கோயில் யூடியுப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT