Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு புதுக்கோட்டை அருங்காட்சியகமும் செயல்படும்; முகக்கவசம் அணிந்து வந்து பார்வையிடலாம்

திருச்சி/ புதுக்கோட்டை

கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ரங்கம் மேலூர் அருகே 27 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஒன்றான இங்கு 300 வகையான தாவரங்களும், 100-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகளும் உள்ளன.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் இந்த பூங்கா மூடப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. கரோனா வைரஸ் தாக்கமும் தற்போது குறைந்து வருவதால், வண்ணத்துப்பூச்சி பூங்காவைத் திறக்க வனத் துறை அனுமதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பார்வையிட நேற்று திறக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

புதுகை அருங்காட்சியகம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் வாரத்தில் வெள்ளிக்கிழமை, 2-வது சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வந்து அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம் என காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x