Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தி்ல் உள்ள 485 பள்ளிகளில் 245 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 47 அரசு உதவி பெறும் பள்ளிகள், 173 மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள், 20 சிபிஎஸ்இ பள்ளிகளில் பள்ளிகள் திறப்புக்குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 239 பள்ளிகளில் 142 அரசுப் பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் பள்ளிகள், 56 மெட்ரிக் பள்ளிகள், 10 சிபிஎஸ்இ பள்ளிகள், 13 சுய நிதிப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
மாணவர்களின் பெற்றோர் பங்கேற்று தங்களது கருத்துக் களை எழுத்துப்பூர்வமாக தெரிவித் தனர். இதில் பள்ளிகளைத் திறக்கலாம் என்றால் அனைத்து வகுப்புகளையும் நடத்தலாமா அல்லது குறிப்பிட்ட வகுப்புகளை மட்டும் நடத்தலாமா என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த பெற்றோர்களில் 70 சதவீதத்தினர் பள்ளி திறக்கலாம் என்ற கருத்தையே முன்வைத்தனர்.
இக்கேள்விகளுக்கான பதில்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலமாக தொகுக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர்களிடம் விசாரித்தபோது, "படிப்பு முக்கியம் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும். குழந்தைகளை வீட்டில் வைத்து 24 மணி நேரமும் பராமரிக்கவும் முடியவில்லை" என்று தெரிவித்தனர். அதே போன்று திறக்கவேண்டாம் என கருத்துத் தெரிவித்தவர்களிடம் கேட்டபோது," தொற்று முழுவதுமாக குறையவில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு திறக்கலாம்" என தெரிவித்தனர். இதேபோல்பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டபோது, "வீட்டில் வேலை வாங்குகின்றனர். பள்ளிக்கு வந்தாலாவது மாணவர்களுடன் ஜாலியாக இருக்கலாம்" என்று தெரிவித்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 383 பள்ளிகளில் நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றன. இக்கூட்டத்தில் குறைந்த அளவு பெற்றோர்கள் பங்கேற்றனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விழுப்புரம் அரசு மகளிர் மேநிலைப்பள்ளியில் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அங்கு வந்திருந்த சில பெற்றோர்கள் கூறுகையில்," பருவ மழை காலமான தற்போது கரோனா தொற்றுடன் மற்ற வைரஸ்களும் பரவுகின்றன. சுகாதாரமற்ற கழிப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது. ஒரே இடத்தில் 7 மணி நேரம் இருக்க நிர்பந்தம் உள்ளது. இவையெல்லாம் தொற்று பரவலுக்கு காரணமாகாதா? எனவே பள்ளிகள் திறப்பது என்ற முடிவை அரசு கைவிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.இதே போல் சில பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறுகையில், "ஆன் லைன் வகுப்பு மூலம் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு சரியாக புரிவதில்லை. பொதுத்தேர்வு நெருங்கிவரும் நிலையில் இன்னமும் பள்ளிகள் திறக்காமல் இருப்பது சரியல்ல. அரசு அறிவித்த தேதியில் பள்ளிகளை திறக்கவேண்டும். இதற்காக கடுமையான வழிகாட்டி முறைகளை அரசு வெளியிட்டு, அதனை கண்காணிக்க, பள்ளிகள்தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் "என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT